நாகர்கோவில், டிசம்பர் 11:
குமரி மாவட்டம், வெட்டூர்ணிமடம் – கிறிஸ்து நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஹோட்டல் அஸ்பி’ (Hotel Asbie) உணவகம், பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும் வகையில் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகவும்; குடிநீர் கேன்கள், உணவு பரிமாறும் பாத்திரங்கள் மற்றும் கைகழுவும் இடங்கள் ஆகியவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் உணவருந்த வரும் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திறந்தவெளியில் உணவு – மொய்க்கும் ஈக்கள்:
உணவுப் பொருட்களை ஈக்கள் மொய்க்கும் அளவிற்குத் திறந்தவெளியில் வைத்திருப்பதும், டம்ளர்கள் மற்றும் பாத்திரங்களை முறையாகச் சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவதும் இங்கு வாடிக்கையாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முறையிடும் வாடிக்கையாளர்களிடம், உணவக ஊழியர்கள் திமிராகப் பேசும் போக்கும் அரங்கேறி வருகிறது.
துாங்கும் உணவுப் பாதுகாப்புத் துறை?
குமரி மாவட்ட உணவகங்களில் இதுபோன்ற சுகாதாரச் சீர்கேடுகள் புதிதல்ல என்றாலும், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நிர்வாகம் இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
இவ்வளவு அஜாக்கிரதையான செயல்பாடுகள், உணவுப் பாதுகாப்புத் துறையின் மெத்தனத்தால் நடக்கிறதா? அல்லது அதிகாரிகளின் மறைமுக ஒப்புதலோடுதான் இவை அரங்கேற்றப்படுகின்றனவா?
என்ற கேள்விகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளன.
மக்கள் உயிருக்கும், உடலுக்கும் ஆபத்து ஏற்படும் முன் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை விழித்துக்கொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்.
