தென்காசி, டிச – 03
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு தென்காசி மாவட்ட நீதிமன்றம் ஆறு வருடம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஜின்னிங் பேக்டரி தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சண்முகநாதன் (வயது 48) இவர் கடந்த 07.06.2019 அன்று அதே தெருவை சார்ந்த இரண்டு பள்ளி சிறுமிகளை மிட்டாய் வாங்க பத்து ரூபாய் தருவதாக கூறி வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இது பற்றி சிறுமியின் தாய் காளீஸ்வரி கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் சண்முகநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கினை விசாரித்த நீதிபதி பி. ராஜவேல் குற்றவாளி சண்முகநாதனுக்கு ஆறு ஆண்டு கால சிறை தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மேலும் அபராதமாக ரூபாய் 1000 கட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.
