திருநெல்வேலி,நவ.3:-
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளருமான டாக்டர். மோனிகா ராணா தலைமையில், இன்று ( நவம்பர்.3) மாலையில், நெல்லை டவுண் மாநகராட்சி, வர்த்தக மைய கூட்ட அரஙகில் வைத்து, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு (வரிசை எண்.270) ஆன, வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, வாக்குச்சாவடிகளின் அங்கீகரிக்கப்பட்ட, அனைத்துக்கட்சி நிலை முகவர்களுடன் ஆன, “ஆலோசனை கூட்டம்” நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர் இரா. சுகுமார் கலந்து கொண்டார்.

நவம்பர் 4-ஆம் தேதி முதல், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, வாக்காளார்கள் பட்டியலில் உள்ள வாக்காளர், தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ளாரா? வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருமுறை பதியப்பட்டு உள்ளதா? இறந்த வாக்காளர்களின் பெயர்கள், நீக்கப்பட்டுள்ளனவா? போன்ற விவரங்களின் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவீர திருத்தம் கணக்கெடுப்பு பணி நடை பெறுகிறது.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளரும், பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் அலுவலருமான டாக்டர் மோனிகா ராணா பேசுகையில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில், பதிவு பெற்ற வாக்காளர்களின், முன்கூட்டியே அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய, கணக்கெடுப்பு படிவத்தின் இரண்டு பிரதிகளை, வழங்க வேண்டும்.
கணக்கெடுப்பின் போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், குறைந்தது மூன்று முறையாவது, ஒரு வீட்டிற்கு சென்று கணக்கெடுப்பு பணிகளை சரியான முறையில், மேற்கொள்ள வேண்டும்.
பின்னர், சரியான விவரங்கள் பதிவு செய்யப்பட்ட படிவங்களை, வாக்காளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு , கணக்கெடுப்பு படிவம் பெற்றதற்கான ஒப்புதலை, மற்றொரு பிரதியில் பதிவு செய்து, வாக்காளரிடம் வழங்க வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுதோறும் செல்லும் போது, அவர்களுடன் 30 எண்ணிக்கையிலான படிவம் 6 மற்றும் அதற்கான உறுதி மொழி படிவத்தினை, தங்களுடன் கொண்டு செல்ல வேண்டும்.
புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில், தங்களுடைய பெயரினை சேர்க்க படிவம் கோரினால், வாக்குச் சாவடி நிலை அலுவலர், படிவம் 6 மற்றும் உறுதி மொழி படிவத்தினை, வழங்கி புதிய வாக்காளர்களை சேர்க்கவும், உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்! – என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில், பாளையங்கோட்டை மண்டல மாநகராட்சி உதவி ஆணையாளரும், உதவி வாக்காளர் பதிவு அலுவலருமான புரந்திரதாஸ், பாளையங்கோட்டை வருவாய் வட்டாட்சியரும், உதவி வாக்காளர் பதிவு அலுவலருமான இசைவாணி, துணை வட்டாட்சியர்கள் குமார் சங்கர் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட, அரசியல் கட்சி முகவர்கள், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
