நாகர்கோவில், ஜனவரி 6:
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த வடிவீஸ்வரம் துணை தபால் நிலையம், நிர்வாகக் காரணங்களைக் கூறி நாகர்கோவில் டவுன் தபால் நிலையத்துடன் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்குத் தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, மீண்டும் அதே இடத்தில் தபால் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் அமைந்திருந்த இந்தத் தபால் நிலையத்தை, பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கணக்கு வைத்திருப்பவர்கள் தபால், சேமிப்பு, காப்பீடு உள்ளிட்ட பணிகளுக்காகப் பெருமளவில் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்தத் தபால் நிலையம் மாற்றப்பட்டுள்ள இடம் தொலைவில் உள்ளதால், பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய போக்குவரத்து மையமான அண்ணா பேருந்து நிலையத்திலேயே தபால் நிலையம் இருந்ததால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. தற்போது அது மூடப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றமும், மிகுந்த சிரமமும் அடைந்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அண்ணா பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தபால் நிலையத்தை உடனடியாக அதே இடத்தில் மீண்டும் திறக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில், காங்கிரஸ் விவசாயப் பிரிவு சார்பில் பொதுமக்களைத் திரட்டி நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்
