விழுப்புரம் நகரின் பழைமை வாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் பகல்பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பர் 20 – ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் முற்பகல் 11 மணிக்கு வைகுண்டவாசப் பெருமாளுக்கு அர்ச்சனை, தீபாராதனையும், தொடர்ந்து தீர்த்தபிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இராப்பத்து முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி வைகுண்டவாசப் பெருமாளுக்கு கருவறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ தேவி – பூதேவி சமேதராய் எழுந்தருளிய வைகுண்டவாசப்பெருமாள்(உற்சவர்) பிரகாரம் வலம் வந்து அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் வழியாக பிரவேசித்து முதலில் நம்பெருமாளுக்கும், பின்னர் பக்தர்களுக்கும் காட்சியளித்தார்.
நிகழ்வில் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள ஸ்ரீபெருந்தேவி தாயார் உடனுறை ஆனந்தவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேதராய் பரமபதவாசல் வழியாக ஆனந்தவரதராஜப்பெருமாள் பிரவேசித்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழுப்புரம் அருகிலுள்ள பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஸ்ரீதேவி -பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபதவாசல் வழியாக அதிகாலை 5மணிக்கு பிரவேசித்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறுவந்தாடு லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், கோலியனூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதுபோன்று வளவனூர் வரதராஜப்பெருமாள், காணை அருகிலுள்ள பெரும்பாக்கம் சீனுவாசப்பெருமாள், வளவனூர் அக்ரஹாரத்திலுள்ள வேதவல்லி நாயகி சமேத லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில், திண்டிவனம் கனகவல்லி தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், சிங்கவரம் ரங்கநாதர் திருக்கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகங்கள் செய்திருந்தன. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் க.நந்தகுமார்
