நாகர்கோவில், டிசம்பர் 29:
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள தைகா பள்ளி ஜமாத் ஊழியர், ஜமாத் சொத்துக்களைக் கையாடல் செய்யக் கோரி சில நபர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி: கோட்டாரைச் சேர்ந்த முகமது ரஜினி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சொத்துக்களைச் சிலர் முறைகேடாக விற்பனை செய்தும், கையாடல் செய்தும் வருவதாக நீண்டகாலமாகப் புகார்கள் எழுந்து வந்தன.

இது தொடர்பாகக் காவல்துறை, நீதிமன்றம் மற்றும் வக்ஃபு வாரியம் வரை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முகமது ரஜினி தனது தற்கொலைக்கு முன்னதாக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், வக்ஃபு வாரியத்தால் நியமிக்கப்பட்ட சையத் அகமது முஸ்தபா, எஸ்.எம். ஷா மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சுடலைமுத்து ஆகிய மூவர் குறித்தும் திடுக்கிடும் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிவாசல் சொத்துக்களைக் கையாடல் செய்வதற்குத் தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், அந்த முறைகேடுகளுக்கு உடன்பட்டால் மட்டுமே சம்பளம் வழங்க முடியும் என்றும், கூடுதல் சம்பளம் தருவதாகவும் கூறி அவர்கள் தன்னை நிர்ப்பந்தித்ததாகக் கடிதத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
அதிகார வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகளின் துணையோடு இந்த முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் போராட்டம் மற்றும் இந்தச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, கோட்டார் இளங்கடை முஸ்லிம் ஜமாத், மாலிக் தீனார் பைத்துல்மால் ஜமாத் மற்றும் தைக்கா பள்ளி ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கோட்டார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களின் முக்கிய கோரிக்கைகள்:
- முகமது ரஜினியின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் சையத் அகமது முஸ்தபா, எஸ்.எம். ஷா மற்றும் வெள்ளமடம் ஆத்திதபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து ஆகிய மூவர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
- அவர்களைக் கைது செய்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும்.
முகமது ரஜினியின் உடலைக் கைப்பற்றிய கோட்டார் காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும், குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வரை உடலை வாங்கப் போவதில்லை என ஜமாத் நிர்வாகிகளும் பொதுமக்களும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
