கன்னியாகுமரி, டிசம்பர் 8
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கிலும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை புறக்காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கு. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜ் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார். இணையக் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் மற்றும் கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதன் ஒரு பகுதியாக, ‘குமரிக்காவலன்’ எனும் புதிய திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிமுகப்படுத்தி, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
இத்திட்டத்தின் மூலம் கடற்கரைப் பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்துப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடனடியாகப் புகார் அளிக்க முடியும்.
குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் தங்கள் உடைமைகள் அல்லது பொருட்களைத் தவறவிட்டாலோ,பிறர் தவறவிட்ட பொருட்களை யாரேனும் கண்டெடுத்தாலோ,சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் தென்பட்டாலோ, ‘குமரிக்காவலன்’ செயலி மூலமாகவோ அல்லது புறக்காவல் நிலையத்திலோ உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம்.
தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், இழந்த பொருட்களை மீட்க உதவுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி : தமிழக விடியல் நிருபர் அன்ஷாத் மாலிக்.
