Headlines

திருநெல்வேலியில் நடைபெற்ற 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற,72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று, 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்!

திருநெல்வேலி,நவ.20:-

மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இம்மாதம் {நவம்பர்} 14- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த, 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் நிறைவு நிகழ்ச்சி, இன்று (நவம்பர். 20) காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, நேருஜி சிறுவர் கலையரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் மு. அப்பாவு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க. நந்த குமார், கூடுதல் பதிவாளர் மு. வீரப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கூட்டுறவு தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் வகையிலான, கூட்டுறவு ரதம் பிரச்சாரப்பயணத்தை தொடங்கி வைத்து, நிறைவு விழாவையும் ஆரம்பித்து வைத்தார். முன்னதாக கூட்டுறவு ஜோதி ஓட்டத்தையும், அமைச்சர் துவக்கி வைத்தார். விழாவில், மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆறுபேருக்கு, மின்சார வசதி இணைப்புடன் கூடிய ஆட்டோக்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

அத்துடன், பயிர்க்கடன், சுய உதவிக்குழுக்கடன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினருக்கான தனிநபர் கடன், குழுக்கடன், தாட்கோ கடன், மூன்றாம் பாலினத்தவர் களுக்கான கடன், சிறுவணிகக்கடன் என, மொத்தம் 20 வகையான திட்டங்களின் கீழ், 12 ஆயிரத்து 170 பேருக்கு, ஒரு கோடியே ஏழு லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை, அமைச்சர் வழங்கினார். நிறைவாக, கூட்டுறவு தனனார்வலர்களைக் கொண்ட, “கூட்டுறவு தொண்டர் படை” யினை, மாநிலத்திலேயே “முதன் முதலாக” திருநெல்வேலியில் துவக்கி வைத்து, அவர்களுடன் இணைந்து “உறுதிமொழி” யினை, அமைச்சர் உள்ளிட்ட அனைவரும், எடுத்துக் கொண்டனர்.

இந்த விழாவில், கூட்டுறவு கீதம் இயற்றிய ஆனந்த் செல்வனுக்கு 50 ஆயிரம் பரிசுத்தொகை, கேடயம் ஆகியவற்றையும், மாநிலத்தில் சிறப்பாக செயலாற்றிய 74 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கி, பாராட்டினார். திருநெல்வேலி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் திலீப்குமார் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *