விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வீடூர், சிறுவை, பொம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிகிறது என பொதுமக்கள் தகவல் அளித்திருந்தனர்.

சமீப காலமாக விவசாயிகள் அமைத்துள்ள பட்டிகளுக்கு, சிறுத்தைகள் வந்து செல்கின்றன. பட்டிகளில் காவலுக்கு ஆட்கள் ஏதும் இல்லாததால் சிறுத்தைகள் ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ஆடு, மாடுகள் வளர்ப்பதை சமீப காலமாக விவசாயிகள் தவிர்த்து வந்தனர். இதையடுத்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து சிறுத்தை தடயங்களை தேடும் பணி மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வராக நதியில் அமைந்துள்ள அழுக்கு பாலத்தின் மேல் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் உடனே விக்கிரவாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் விசாரணை.
தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அங்கு சுமார் மூன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை சாலையில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்தது. சிறுத்தை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுத்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை
வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் வனவிலங்கு மருத்துவ மையத்துக்கு கொண்டு சென்றனர். “பிரேத பரிசோதனைக்கு பிறகே சிறுத்தையின் இறப்புக்கான உண்மையான காரணம் தெளிவாக தெரிய வரும்,” என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் விக்கிரவாண்டி காவல் துறையினர் போக்குவரத்தினை சீர் செய்தனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை எந்த வனப்பகுதியிலிருந்து வந்தது, அந்தப் பகுதியில் மேலும் சிறுத்தைகள் உள்ளனவா என்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.
