திருநெல்வேலி,அக்.7:-
திருநெல்வேலி மாநகர் மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மற்றும் புறநகர் மாவட்டம் பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளன்குளம் ஆகிய இடங்களில், இன்று (அக்டோபர். 7) “உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இவ்விரு முகாம்களையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- ” உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம்கள், மாநிலம் முழுவதுமுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் என, மொத்தம் 10 ஆயிரம் இடங்களில் நடத்திட, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
நகர்ப்புறங்களில், அரசின் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் அரசின் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும், பொதுமக்களுக்கு கிடைப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர், இந்த உன்னத திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்களால் வழங்கப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களில், தீர்வு காணப்படும்.
இத்திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் 38 முகாம்களும், நகராட்சி பகுதிகளில் 29 முகாம்களும், பேரூராட்சி பகுதிகளில் 34 முகாம்களும், ஊராட்சி பகுதிகளில் 154 முகாம்களும் என, மொத்தம் 255 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டதில், இதுவரையிலும் 221முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. முடிக்கப்பட்ட முகாம்கள் மூலம், பொதுமக்களிடமிருந்து 45,233 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றுள் 30,165 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
10,284 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 4,784 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன!”- இவ்வாறு, மாவட்ட ஆடசியர் சுகுமார், தெரிவித்தார். முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம், முகாமின் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவர், வெள்ளாளன்குளம் அங்கன்வாடி வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, வினவினார். திருநெல்வேலி வருவாய் வட்டாட்சியர் சந்திரஹாசன், நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் புரந்திர தாஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சத்தியவாணிமுத்து ஆகியோரும் முகாமில் பஙகேற்றிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
