திருநெல்வேலி, அக்.6:-
பாளையங்கோட்டையில் உள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் அதிநவீன பல்நோக்கு மருத்துவ மனை வளாகத்தில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைப்பதற்காக, 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, கூடுதல் மருந்துகள் சேமிப்பு கிடங்கினையும், மாவட்ட சுகாதார அலுவலகம் அருகில், 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள, நவீன பகுப்பாய்வு உணவு பரிசோதனை எந்திரங்களின் செயல்பாட்டினையும், நாங்குநேரி அருகே உள்ள, கடம்பன் குளம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளியில், 1 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பில் முதல் தளம் வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள, 6 புதிய வகுப்பறை கட்டிங்களையும், இன்று (அக்டோபர். 6) காலையில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, “காணொளி காட்சி” மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்தார்.

அதே நேரத்தில், பாளையங் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் பங்கேற்று, “குத்து விளக்கு” ஏற்றி வைத்தார். பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொணடனர். கடம்பன்குளம் நிகழ்ச்சியில், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் “ரூபி”ஆர். மனோகரன், “குத்து விளக்கு” ஏற்றி வைத்தார். திருநெல்வேலி மண்டல மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் லதா, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் விஜய சந்திரன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் புஷ்பராஜ், நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ஷர்மிளா கமால் உட்பட பலரும், நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
