Headlines

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதவெறி கருத்துகள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் மனு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதவெறி கருத்துகள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் மனு.

செப் 17 கன்னியாகுமரி –

கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சியினர், அதன் மாவட்ட செயலாளர் முஜீப் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.

அந்த மனுவில், “அறிவுசால் ஆன்மீக கல்விக் கழகம்” என்ற அமைப்பு, குமரி மாவட்டம் முழுவதும் “இந்து சமய வகுப்பு” என்ற பெயரில் இளம் பிஞ்சுகளின் மனங்களில் மதவெறி, சிறுபான்மையினர் மீது வெறுப்பு கருத்துகளைப் பரப்பி வருகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அண்மையில், நாகர்கோவிலின் இருளப்பபுரம் பகுதியில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபத்தில், அந்த அமைப்பின் “12–வது இளம் இந்து பட்டமளிப்பு விழா” நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இரண்டு இளம்பெண்கள், இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர்கள் குறித்து மிக மோசமான, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை உரையாடல் வடிவில் பகிர்ந்தனர். அந்த காணொளி தமிழகம் முழுவதும் பரவி, பெரும் பதற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவர் த. பாலசுப்பிரமணியன், கலைநகர் கங்காதரன் ஆகியோர் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் BNS சட்டப்பிரிவுகள் 192, 196(1)(a), 196(1)(b) கீழ் Cr.No. 79/2025 என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மனுவில் மேலும், கன்னியாகுமரி மதரீதியாக உணர்திறன் மிக்க மாவட்டம் என்பதால், இத்தகைய நிகழ்வுகளை எளிதாக எடுத்துக் கொள்வது ஆபத்தானது. சமூக நல்லிணக்கம், பொது அமைதி, மக்களின் பாதுகாப்பை பாதிக்கும் இவ்வாறான விசமிகளுக்கு எதிராக இன்னும் கடுமையான சட்டப்பிரிவுகள் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இதனால், மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை காக்கும் நோக்கில் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *