மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் (1) இல்லம் தேடிக்கல்வி, (2) மக்களைத் தேடி மருத்துவம்,(3) மக்களுடன் முதல்வர், (4) உங்களைத்தேடி உங்கள் ஊரில்,(5) மக்களுடன் ஸ்டாலின் என்ற முன்னோடித் திட்டங்களைப்போல ” வீடு தேடி ரேஷன் பொருட்கள் ” என்ற முன்னோடித்திட்டத்தைச் செயல்படுத்த சோதனை முறையாக தமிழ்நாடு முழுக்க ஜுலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்க தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில், சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர், தர்மபுரி, நாகப்பட்டினம், மற்றும் நீலகிரி மாவட்டம் உட்பட 10 மாவட்டங்களில் ஜூலை 1ஆம் தேதி முதல் சோதனை ரீதியாக துவங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 70 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடி மக்களின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

அரிசி உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருட்களை வாங்க குடும்ப அட்டை உறுப்பினர்கள் நியாய விலை கடைகளுக்கு நேரில் வந்து விற்பனை முனைய கருவியில் கைரேகை வைத்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். மூத்த குடிமக்கள் நடக்க இயலாத அளவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சார்பாக வேறு நபரை அனுப்பி பொருட்களை வாங்கலாம்.

இதற்காக அவர்கள் பிறரை சார்ந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியோர்களின் சிரமத்தினை நீக்கும் வகையில் அவர்களது வீடுகளுக்கே அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் திட்டம் (Pilot Program) சோதனை அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில், 02.07.2025ல் கோத்தகிரி வட்டத்தில் உள்ள பெத்தலா பகுதி நேர நியாய விலைக் கடை அமைந்துள்ள பகுதியில் நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) (பொறுப்பு) திரு . சி. அய்யனார், நியாயவிலைக்கடை பணியாளர் ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.
