அரசின் திட்டங்களுக்கு எதிராக சாடும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியக்கோடி நடவடிக்கை.
வாணியம்பாடி,ஜூன்.11-திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர் சக ஆசிரியை ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் கல்லூரி கனவு திட்டம் அந்த திட்டம் இந்த திட்டம் என கூறி கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ் செயல்படும் கல்வித் துறை அதிகாரிகள் உயிரை எடுக்கின்றனர் என விமர்சித்து துறை அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு ஒருமையில் பேசி இருந்தார்.
மேலும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு என்பது தேவையா? என அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் தலைமை ஆசிரியை குற்றம் சாட்டி விமர்சனம் செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் கடந்த 6.6.2025 ஆம் தேதி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியக்கோடி உத்தரவிட்டுள்ளார்.
