உடுமலை ஸ்ரீ ஜி.வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர நிர்ணய குழுவினர் (நாக்) 2 நாள் ஆய்வு நிறைவடைந்தது.
உடுமலை ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி 1952 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 20 துறைகளுடன் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.கல்லூரியில் உடுமலை மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இதுதவிர பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சார்ந்த மாணவியரும் பயில்கின்றனர். ஐந்தாவது சுழற்சியாக இப்பொழுது நாக் கமிட்டி கல்லூரிக்கு வருகை புரிந்துள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டில் முதல் சுழற்சியில் 4 நட்சத்திர அந்தஸ்தையும், 2வது சுழற்சியில் B++ தகுதியையும், 2013 ஆம் ஆண்டு 3வது சுழற்சியில்
A தகுதியையும், 2019 ஆம் ஆண்டு 4 வது சுழற்சியில் A+ அந்தஸ்தையும் பெற்று முதல்நிலைக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது கல்லூரியின் தரத்தை மதிப்பிட இமாச்சல பிரதேஷ் வக்நாகாட்
ஜெ.பி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திர குமார் சர்மாவை தலைவராகவும், உத்திர பிரதேசம் தயால்பாக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் லக்ஷ்மி நாராயண் கோலியை ஒருங்கிணைப்பாளராகவும், மகாராஷ்டிரா மாநிலம் டிஎஸ்பிஎம்
கே. வி பெந்தர்க்கர் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் அனுராதா கிஷோர் ராணடேவை உறுப்பினராகவும் கொண்ட
தேசிய தரக்குழுவினர் 2 நாட்கள் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை வரவேற்கும் முகமாக கல்லூரி இசைக்குழுவினர் மற்றும் தேசிய மாணவர் படை மாணவியர் அணிவகுப்பு மரியாதை செய்தனர். கல்லூரியின் செயலர் சுமதி கிருஷ்ண பிரசாத் மலர் கொத்து வழங்கி வரவேற்றார்.இயக்குனர் மற்றும் ஆலோசகர் முனைவர் ஜெ.மஞ்சுளா, முதல்வர் முனைவர்
ஆர் பரமேஸ்வரி, அகத்தர உறுதிக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.ஏஞ்சல் ஜாய் ஆகியோர் உடன் இருந்தனர். பாடத்திட்டங்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள், ஆராய்ச்சிப் பணிகள், விரிவாக்கம், உள்கட்டமைப்பு, மாணவியர் மேம்பாடு, கல்லூரியின் தனித்துவம் ஆகிய ஏழு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர். கல்லூரியின் பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை முதுநிலை ஆய்வகங்கள், நூலகம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம்,வகுப்பறை, விளையாட்டு மைதானம்,விடுதி,
என். எஸ். எஸ், என். சி. சி செயல்பாடு, ஆய்வக மாணவர்களிடம் கலந்தாய்வு, பகடிவதைத் தடுப்புக் குழு உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர். துறைகள், துறைத்தலைவர்கள், ஆசிரியப் பணியாளர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் , ஆளும் குழு மற்றும் பெற்றோர்கள் ஆகியோரையும் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
கல்லூரி உள் கட்டமைப்பு,நிர்வாக செயல்பாடுகள், மாணவிகளுக்கு கல்லூரி வழங்கும் வசதிகள், சேவைகள், மாணவியர் விடுதி, உணவு, குடிநீர் வசதி உள்ளிட்ட தகவல்களையு சேகரித்து அறிக்கை தயாரித்தனர். அந்த ஆய்வறிக்கையை பெங்களூரில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த அறிக்கையை நிறைவுக் கூட்டத்தில் கல்லூரியின் முதல்வர் முனைவர்
ஆர். பரமேஸ்வரி (பொறுப்பு) மற்றும் அகத்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.ஏஞ்சல்ஜாய் அவர்களிடமும் வழங்கினர்.
நிறைவுக் கூட்டத்தில் அகத்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர் ஏஞ்சல் ஜாய் அவர்கள் நன்றிகூறினார். அக்கூட்டத்தில் அவர் நேர்மையான மற்றும் பயனுள்ள முறையில் மதிப்பீடு செய்தமைக்காக தேசிய தர நிர்ணயக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆளும் குழு, அகத்தர உறுதிக் குழு உறுப்பினர்கள், ஆசிரியப் பணியாளர்கள்,
ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோரின் தொடர் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். இது தனிநபர் வெற்றி அல்ல கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் கல்லூரிக்கு அளித்துள்ள தரம் குறித்து பெங்களூருவில் உள்ள தர மதிப்பீட்டு மன்றம் வல்லுநர்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அறிவிக்கும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.