உடுமலை
நவம்பர் 19.
ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வருகின்ற 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

உலகின் தலைசிறந்த 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஹாக்கி சம்மேளனம் இணைந்து நடத்துகிறது.
இதற்கான கோப்பை கடந்த பத்தாம் தேதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழக முழுவதும் வலம் வந்து அறிமுக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு வருகை தந்த ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை அறிமுக நிகழ்ச்சி உடுமலையில் உள்ள தனியார் கல்லூரி ஆன வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் இருந்து வருகை தந்த மாணவர்கள் கோப்பைக்கு மலர் தூவி, பட்டாசு வெடித்து சிலம்பம் சுற்றி, அணிவகுப்பு செய்து உற்சாக வரவேற்பாளித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கோப்பையை அறிமுகம் செய்தனர்.
விளையாட்டு வீரர்கள், மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
