உடுமலை
நவம்பர் 13.
பாசன வாய்க்கால்களில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படும் குப்பைகளால்,பாசன நீருடன் கலந்து விளைநிலங்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலை உள்ளது.
‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..!! இப்பயிரை கண்ணீரால் காத்தோம்’ என்ற பாரதியின் சுதந்திரப் போராட்ட கால வரிகள்,இன்றைய விவசாயிகளின் நிலைக்கு பொருந்துகிறது.
பல போராட்டங்களுக்கு மத்தியில் பயிரை கண்ணீர் விட்டு காக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பருவமழை கைவிட்டால் பாசன நீர் கிடைக்காமல் பயிர்கள் காயும் நிலை ஏற்படும்.ஆனால் போதுமான அளவில் தண்ணீர் கிடைத்தாலும் ஒருசிலரின் அலட்சியப்போக்கால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது ‘உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பார்கள்.
ஆனால் நாங்கள் கழிவுகளில் கையும் காலும் வைத்தால் தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
நீர் நிலைகள் என்பது ‘மெகா சைஸ்’ குப்பைத் தொட்டிகள் என்ற எண்ணமே பலருடைய மனதில் உள்ளது.இதனால் குளம்,ஆறு,ஓடை,வாய்க்கால் என அனைத்துவிதமான நீர்நிலைகளிலும் குப்பைகளைக் கொட்டுகின்றனர்.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்,பாசன வாய்க்கால்கள் மூலம் விளைநிலங்களை வந்து சேர்கின்றன.
பல பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக வாய்க்கால்களில் கலக்கப்படுகிறது.

இதனால் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது முதலில் வரும் தண்ணீர் பெருமளவு கழிவுகளை சுமந்து கொண்டே விளைநிலங்களுக்கு வந்து சேர்க்கிறது.
துர்நாற்றத்துடன் வரும் அந்த நீரில் இறங்கி கழிவுகளை சுத்தப்படுத்த வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.
இந்தநிலை மாற வேண்டுமானால் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டுவது என்பது நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கழிவுகளை கொட்டுவதற்கு சமம் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் நீர் நிலைகளில் கழிவுகள் கலக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது அமராவதி ஆற்றிலிருந்து ராஜவாய்க்கால் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அந்த தண்ணீரில் வந்த கழிவுகள் கடத்தூர் அருகே நெல் வயலில் தேங்கி பயிர்களை பாழாக்கியுள்ளது.இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’என்று விவசாயிகள் கூறினர்.
