அக்டோபர் 10 : உடுமலை
கோவையில் இருந்து உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை அல்லது போத்தனூரில் இருந்து திருச்செந்தூர் வரை இரவு நேரம் முன்பதிவு ரயில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறிமுகப்படுத்தப்படலாம் அதே ரயில் பகல் நேர முன்பதிவு இல்லாத ரயிலாக திருச்செந்தூரில் இருந்து இயக்கலாம் இந்த இரண்டு ரயில்களும் மதுரை மற்றும் திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பொது மக்களுக்கு வசதியாக இருக்கும்.
பொள்ளாச்சியில் இருந்து திருச்சி வரை பகலில் தினசரி முன்பதிவு இல்லாத ரயில் ஒன்றை இயக்கினால் இந்த வழித்தடத்தில் இருக்கும் ஊர் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் இந்த ரயிலானது முன்னரே திருச்சியில் இருந்து சென்று கொண்டிருக்கும் பல ரயில்களுக்கு பயணிகள் மாறிக்கொள்ள வசதியாக இருக்கும்.
காலையில் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டால் மறுமார்க்கத்தில் மதியம் திருச்சியில் இருந்து புறப்படும் போது மக்களுக்கு வசதியாக இருக்கும்.
கோவையிலிருந்து ராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள பயணிகள் சென்றுவர ஏதுவாக இரவு நேரம் முன்பதிவு ரயில் ஒன்றை இயக்க வேண்டும் இந்த ரயிலில் முன்பதிவு ரயில் பெட்டிகளையும் அதிக எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் தற்போது உடுமலை வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பட்டியலை அதிகம் இணைக்க வேண்டும் தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க இது பயனுள்ளதாக இருக்கும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
