செப் 07. உடுமலை:
உடுமலை அடுத்துள்ள உள்ள மடத்துக்குளம் அருகே பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகமூடி கும்பல் ஒன்று அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மடத்துக்குளத்தையடுத்த கிழக்கு குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சபரீஸ்வரன்(வயது 38).பர்னிச்சர் கடை வைத்துள்ளார்.

மேலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் மற்றும் 2 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.அவர் குடியிருக்கும் வீட்டு முன் ஷெட் அமைத்து கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 9 ம் தேதி இரவு சபரீஸ்வரன் குடும்பத்துடன் வீட்டுக்குள்ளே தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது வீட்டின் அருகில் வந்து நின்ற வெள்ளை நிற காரில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர்கள் கைகளில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சபரீஸ்வரனின் கட்சி அலுவலகம்,சமையலறை உள்ளிட்ட இடங்களில் புகுந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தொழில்முறைக் கொலையாளிகள் போல சாவகாசமாக பட்டாக்கத்தியுடன்,முகமூடி அணிந்த நபர்கள் சுற்றி வரும் கண்காணிப்புக் கேமரா காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.முன்விரோதம் காரணமாக குமரலிங்கம் சிலம்பரசன்,கொழுமம் சந்தோஷ் மற்றும் அஜித் ஆகியோர் ஆட்களை ஏற்பாடு செய்து அத்துமீறி வீடு அலுவலகம் ஆகியவற்றில் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக சபரீஸ்வரன் குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அச்சமூட்டும் வகையில் முகமூடி அணிந்த நபர்கள் ஆயுதங்களுடன் அட்டகாசம் செய்யும் வீடியோ பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
