வாணியம்பாடி,ஜூலை.23- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏ.கே.சீனிவாசன். இவர் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் ஊராட்சிக்கு பின்புறம் அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் அமைப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரை அணுகிய போது அவர் வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெறுவதற்காக 12 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன் கடந்த ஓராண்டில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த சீனிவாசன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனத் தடவி ரூபாய் நோட்டுகள் கொடுத்து அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் ஊராட்சிமன்ற தலைவர் சிவக்குமாரை நேற்று வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலைக்கு வரவழைத்து அங்கே அவரிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராஜீவ், ஆய்வாளர் கௌரி மற்றும் உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரை கையும் களவுமாக கைது செய்து பின்னர் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவரிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டு பின்னர் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேல் சாணாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெற லஞ்ச பணம் பெற்ற போது கையும் களவமாக கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
