வாணியம்பாடி,ஜூலை.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பழைய காலணி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் நரசிம்மன் (17). இவரை இருசக்கர வாகன திருட்டு வழக்கு மற்றும் மணல் கொள்ளை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அம்பலூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அடித்து கொலை செய்து வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றனர்.

இது தொடர்பாக உயிரிழந்த நரசிம்மன் தந்தை ஜெயராஜ் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்டு ஜோலார்பேட்டை இரயில்வே காவல் துறையினர் அம்பலூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அசோக் குமார் பெங்களூரில் வேலை செய்து வந்த நிலையில் தனது சொந்த ஊரான அம்பலூருக்கு வந்த பின்னர் பக்கத்து ஊரான சங்கராபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்க்கு சென்று சென்றுள்ளான்.
இதனை அறிந்த கொலையான நரசிம்மனின் தந்தை ஜெயராஜ் அசோக் குமாரை தீர்த்து கட்ட ஸ்கேட்ச் போட்டு காத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று அசோக் குமார் பெங்களூருக்கு செல்ல பேருந்து நிறுத்தம் வரை தனது நண்பன் மணிகண்டன் உடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
அப்போது அசோக் குமாரை சுற்றிவளைத்த 7 பேர் கொண்ட கும்பல் அசோக் குமார் மற்றும் அவரது நண்பன் மணிகண்டன் ஆகிய 2 பேரை பாலாற்று பகுதிக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து மணிகண்டன் தப்பியோடிய நிலையில் அசோக் குமாரை கை, கால்களை கட்டிப்போட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற போது பொதுமக்கள் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்து 7 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியுள்ளனர்.
இதில் அசோக் குமார் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவருக்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது மகனை கொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்கும் சம்பவம் தொடர்பாக நடந்த கொலை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
