திருநெல்வேலி, ஜூன்.23:-
தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றதும், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானதுமான, திருநெல்வேலி “அருள்மிகு சுவாமி நெல்லையப்பர், அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள்” திருக்கோவிலின் புகழ்பெற்ற திருவிழாக்களுள் ஒன்று “ஆனிப்பெருந்திருவிழா” ஆகும். இந்த திருவிழா இம்மாதம் [ஜூன்] மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கவுள்ளது. இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான “திருத்தேரோட்டம்” அடுத்த மாதம் [ஜூலை] 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருவிழாவினை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்த, ஆலோசனை கூட்டம், இன்று [ஜூன்.23] மாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தலைமையில், நடைபெற்றது.

வாகனங்கள் நிறுத்தும் இடங்களின் ஏற்பாடுகள், பக்தர்களுக்கான பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், மருந்து, மாத்திரைகள், மருத்துவர்கள் போன்ற வசதிகள் தொடர்பான ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகளை இயக்குதல், தடையில்லா சீரான மின் விநியோகம், நோய்க்கிருமிகள் பரவாதவாறு கிருமி நாசினிகள் தெளித்தல், பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு துறையினரை தயார் நிலையில் வைத்தல், எளிதில் தேர் செல்லக்கூடிய வகையில், நான்குரதவீதிகளையும் செம்மைப்டுத்துதல், நகரின் அனைத்துபி பகுதிகளையும் தூய்மையாக, சுத்தமாக பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா, மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் [பொது] அனிதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்சினி, வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலர் என்.ஆர். சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
