நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இன்று 11.06.2025 தும்மனட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நிகழ்ச்சி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கூட்டுறவானது தனியார் மற்றும் பொதுத்துறைக்கு இடையேயான இணைப்பு பாலமாக செயல்பட்டு பல்வேறு மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி புரிந்து வருகிறது என கூறினார்.
திட்ட விளக்க உரையாற்றிய திரு. சி. அய்யனார் மேலாண்மை இயக்குநர் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு கூட்டுறவின் மூலம் நடத்தப்பட்டு வருகின்ற கலை அறிவியல் கல்லூரி, தொழில் நுட்ப கல்லூரி மற்றும் கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி ஆகிய படிப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்று கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் நிரந்தர பணியாளராக பணியாற்றும் வாய்ப்பு உள்ளது. எனவே, மேற்காணும் படிப்புகளில் இணைந்து எதிர்காலத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் உரையாற்றிய மரு. தே. சித்ரா மேலாண்மை இயக்குநர் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பேசுகையில் மாணவர்கள் தங்களது வங்கி வரவு செலவுகளை கூட்டுறவு வங்கியின் மூலமாக மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு. எஸ். பீமன் வரவேற்புரை வழங்க, பள்ளியின் உதவி தலைமையாசிரியர் திரு. ஸ்ரீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் திரு. ரவி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக ஆசிரியர் திரு. தேவராஜ் நன்றி கூறினார்.
