தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அமைந்துள்ள ஆனைமலையான்பட்டி கிராமத்தில், ஆண்டுதோறும் மிகவும் சீரும் சிறப்புடனும் நடைபெறும் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்ட போட்டி இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது.

முத்தமிழ் கைப்பந்தாட்ட குழுவினரால் நடத்தப்பட்ட இந்த மாவட்ட அளவிலான போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

பல ஆண்டுகளாக இடைவிடாது நடைபெற்று வரும் இந்த விளையாட்டு போட்டி, ஆனைமலையான்பட்டி கிராமத்தின் விளையாட்டு மரபையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விழாவாக விளங்கி வருகிறது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த அணிகள், உற்சாகமாக போட்டிகளில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை நேரில் சந்தித்தபோது, “உயிருள்ள வரை எத்தனை தடைகள் வந்தாலும் இந்த பாரம்பரிய விளையாட்டை தொடர்ந்து நடத்துவோம்” என அவர்கள் கூறிய உறுதியான வார்த்தைகள் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
கிராம மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, தன்னார்வமாக போட்டி நடத்துவதில் ஈடுபடுவது இந்த கிராமத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
பாரம்பரிய விளையாட்டுகளை காக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த முத்தமிழ் கைப்பந்தாட்ட போட்டி, இளைய தலைமுறையினரிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பதுடன், ஆனைமலையான்பட்டி கிராமத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
