நீலகிரி மாவட்டம் கூடலூர், கோத்தகிரி, கேத்தி பஞ்சாயத்திற்குட்பட்ட மைனலை ஜங்ஷன், மந்தடா, புது லைன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செக்ஷன்–17 பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை எனக் கூறி, இன்று காலை அப்பகுதி மக்கள் திரளாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் DYFI மற்றும் CITU ஆகிய இரு அமைப்புகளின் சார்பில், அவற்றின் மாநிலச் செயலாளர் திரு. பி. சண்முகம் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது.
போராட்டத்தின் போது, மந்தடா – புது லைன் முந்தைய கவுன்சிலர் திரு. கதிரேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், செக்ஷன்–17 பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசாங்கத்தால் எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும், குடிநீர் வசதி, மின்சாரம், நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தரப்படவில்லை என்றும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், “செக்ஷன்–17 பகுதியில் வாழும் மக்களை இந்த அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
அங்கு வசிப்பவர்கள் மனிதர்கள்தானே, விலங்குகள் அல்ல” என வேதனையுடன் தெரிவித்தார்.
தங்களுக்கு உரிய அடிப்படை உரிமைகளை மட்டுமே கோருவதாகவும், அவற்றையே வழங்க முடியாத அரசு எங்களை எவ்வாறு பாதுகாக்கும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் அலட்சியமான பதில்களை வழங்குவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த போராட்டத்தில் கூடலூர், கோத்தகிரி மற்றும் இதர பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, ஐஏஎஸ் அவர்களிடம் மனுவாக வழங்கினர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
