நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக குந்தா வட்டத்தில் செயல்பட்டு வரும் ஐயன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் உள்ள மேல்குந்தா கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் இங்கிலாந்தில் 1844ம் ஆண்டு ராக்டேல் முன்னோடிகளால் தொடங்கப்பட்ட கூட்டுறவு இயக்கமானது இந்தியாவில் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது அறிக்கையின் அடிப்படையில் 1904ம் ஆண்டு தொடங்கப்பட்டது அதுபோல நீலகிரி மாவட்டத்தில் 1935ம் ஆண்டு ராவ் பகதூர் எச்.பி. ஆரிகவுடர் அவர்களால் தொடங்கப்பட்டது தான் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் என கூறினார். மேலும் ஐந்து ஏக்கர் அளவிற்குள்ளாக விவசாயம் செய்யும் சிறு,குறு விவசாயிகளுக்கு நிதி ஆதாரம் வழங்கி அவர்களது நிலையை மேம்பட செய்வே கிராம பகுதிகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். இந்நிகழ்ச்சிக்கு திரு . சி. அய்யனார், துணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர், நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, முன்னிலை வகித்தார். தனது முன்னிலையுரையில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூட்டுறவு செயலி வாயிலாக இனிவரும் காலங்களில் விவசாயக் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் ஆகியவற்றை விண்ணப்பம் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செயலியில் விண்ணப்பம் செய்யும் போது தேவையான ஆவணங்களை உள்ளீடு செய்ய வேண்டும், பின்னர் அதனை சம்பந்தப்பட்ட சங்க செயலாளர் மற்றும் சரக மேற்பார்வையாளர் ஆய்வு செய்து கடன் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
பின்னர் திரு. கிருஷ்ணன் முன்னாள் தலைமையாசிரியர் வாழ்த்துரை வழங்கினர்கள். முன்னதாக திரு. மூர்த்தி முன்னாள் தலைமை ஆசிரியர் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சங்க பணியாளர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இறுதியில் திரு. ரவி நன்றியுரை கூறினார்.
