திருநெல்வேலி, ஜன.30:- திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தலின்படி, மாநகர காவல் துணை ஆணையர்கள் (கிழக்கு) V.வினோத் சாந்தாராம், (தலைமையிடம்) S.விஜயகுமார் ஆகியோர் தலைமையில், இன்று [ஜன.30] திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள, மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, “மெகா சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகம் ஆகியன இணைந்து, இந்த மெகா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, நடத்தின. இதில், பள்ளி மாணவ மாணவிகள், வாகன ஓட்டுநர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர், அவர்களுக்கு சாலையில் வாகனத்தை இயக்குவது, போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், மீட்பு பணிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன? மோப்ப நாய் பிரிவின் செயல்பாடுகள் எனனென்ன? ஆகியவை குறித்தும், 108 ஆம்புலன்ஸ் வண்டிகளின் துரித நடவடிக்கைகள் குறித்தும் ஒத்திகை நிகழ்ச்சிகள், நடத்தி காண்பிக்கப்பட்டன. மாநகர காவல் ஆயுதப்படையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

மாணவ- மாணவிகள் காவலர்கள், ஓட்டுனர்கள் ஆகியோருக்கு, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகர காவல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆணையரும், ஆயுதப்படை பொறுப்பாளருமான கணேசன் தலைமையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் பாளையங்கோட்டை செல்லத்துரை, நெல்லை சந்திப்பு மணிமாறன், மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் செந்தாமரை கண்ணன், மகேஸ்வரி மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
