திருநெல்வேலி – நவ 21:- திருநெல்வேலியை சேர்ந்த தங்கப்பாண்டியன் [வயது.40]. இவர் மனைவி பெயர் பார்வதி , இந்த தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகன் உண்டு. இவர் மும்பையில் உள்ள, அவருடைய அப்பா உணவகத்தில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், மும்பையில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான, திருநெல்வேலிக்கு வந்த போது, கடந்த 18-ஆம் தேதி அன்று, இரவு 11 மணியளவில், சந்திப்பு ரயில் நிலையம் அருகில், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
இதில் இவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மிகவும் மோசமான நிலை உள்ளதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, 2 நாட்கள் கழித்து, அதாவது சென்ற 20 ஆம் தேதி அன்று, அவருடைய மூளை செயல்பாடுகளை கண்டறியும், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை, முடிந்த பிறகு பெறப்பட்ட அறிக்கையில், அவர் “மூளைச்சாவு” அடைந்துவிட்டார்! என்பதை, அவருடைய உறவினர்களிடம் டாக்டர்கள் தெளிவாக எடுத்துக் கூறினர். இதன் பின்னர், அவருடைய உறவினர்கள் தாமாக முன்வந்து, அவருடைய உடல் உறுப்புகளான சிறுநீரகங்கள் மற்றும் தோல், கருவிழிகள் ஆகியவற்றை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானமாக வழங்குவதற்கு முன் வந்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று [நவ.21] அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. தானம் பெறப்பட்ட பின்னர், “உடற்கூறாய்வு ” செய்யப்பட்டு, அவரது உடலுக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் [DEAN] டாக்டர் சி. ரேவதி பாலன் தலைமையில், “மலர் மாலை” வைத்து, “மரியாதை” செலுத்தப்பட்டு, முறைப்படி உறவினர்களிடம், அவருடைய உடல் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்