நிலத்தில் இருந்த மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மூதாட்டி குடும்பத்தினருடன் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா.

வாணியம்பாடி,ஜூலை.10- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம், குறவன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவபாக்கியம். இவரது கணவர் செல்வராஜ். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளான். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணம் முடிந்த நிலையில் கணவர் செல்வராஜ் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.
இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில், சிவபாக்கியம் தனது மகன் மற்றும் மருமகளுடன் நிலத்திலேயே குடிசை கட்டி வாழ்ந்து வருகிறார். இவர்களது நிலத்தை உறவினரான பெருமாள் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயார் செய்து வெங்கடாச்சலம் என்பவருக்கு கிரையம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து சிவபாக்கியம் 2015ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு சிவபாக்கியத்திற்கு நிலம் சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்காமல், வெங்கடாச்சலம்
அடியாட்கள் உதவியுடன் மூதாட்டியை
சிவபாக்கியத்தை நிலத்தை காலி செய்ய தொல்லை கொடுத்து வந்ததால் கடந்த 8 நாட்களாக சிவபாக்கியம் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சென்று வந்துள்ளார். ஆனால் ஆலங்காயம் போலீசார் வெங்கடாசலமுக்கு ஆதரவாக புகாரை பெறாமல் வந்ததாக கூறப்படுகிறது.
.
இதே போல் சிவாபாக்கியம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார், ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது,
இந்நிலையில் நேற்று வெங்கடாச்சலம் அவரது ஆட்களை அழைத்து சென்று நிலத்தில் உள்ள தென்னை மற்றும் இதர மரங்களை வெட்டியும், நிலத்தில் டிராக்டர் மூலமாக ஏர் ஒட்டியுள்ளார்.
அப்போது சிவபாக்கியம், நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவதாக பூங்குளம் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளிக்க சென்ற போது, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால் அவர் குடும்பத்தினருடன், கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்,
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்காயம் காவல்துறையினர் சிவபாக்கியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
