நாகர்கோவில்; 08
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செட்டிக்குளம் சந்திப்பிலிருந்து கோட்டார் சவேரியார் தேவாலயம் சந்திப்பு வரை, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சாலையின் இருபுறங்களிலும் நடைபாதை மற்றும் அலங்காரக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பகுதிகளில் சிறு, பெரிய வியாபாரிகள் பலர் தங்களது கடைகள் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் நடைபாதை பணிகள் மந்தமாகவும், அலட்சியமாகவும் நடைபெறுவதால், பல கடைகளின் வாசல்கள் சேதமடைந்து, வியாபாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், அன்னம் ட்ரேடர்ஸ் மற்றும் கணேஷ் ஸ்டோர்ஸ் எனும் இரண்டு கடைகளின் முன்புறம் மட்டும் பாதிப்பு இல்லாமல் விட்டு விடப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு மற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையாக எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை குறித்து அரசு ஒப்பந்தக்காரர் எஸ். தியாகராஜன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, “தீபாவளி வியாபாரத்திற்காக அந்தக் கடைகள் முன்புறம் மட்டும் வேலை செய்யாமல் விட்டோம்” என்ற பதிலை அளித்தார்.
ஆனால் இதனால் புதிய கேள்விகள் எழுந்துள்ளன — தீபாவளி வியாபாரம் அந்த இரண்டு கடைகளுக்குத்தானா? மற்ற வியாபாரிகளுக்கு தீபாவளி வியாபாரம் செய்ய வேண்டிய அவசியமில்லையா?
தீபாவளி முடிந்து பல நாட்கள் கடந்தும் அந்த இரண்டு கடைகளின் முன்புறம் மட்டும் இன்னும் பணிகள் தொடங்கப்படாதது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஒப்பந்தக்காரர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் வழங்குகிறார்? மாநகராட்சி அதிகாரிகள் இதை அறிந்தும் மௌனமாக இருப்பது ஏன்? இது அதிகார துஷ்பிரயோகமா அல்லது அரசியல் ஆதரவா?
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதை கடுமையாக எதிர்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், மாநகராட்சி மேயரும் அதிகாரிகளும் இந்த விவகாரத்தைப் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மேலும் சந்தேகத்தை தூண்டுகிறது.
பாகுபாடு, அலட்சியம், அதிகாரத்தின் துஷ்பிரயோகம் — இதற்குப் பதில் சொல்லுமா மாநகராட்சி நிர்வாகம்?

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
