திருநெல்வேலி,டிச.15:- தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, இன்று ( டிசம்பர்.15) சபாநாயகர் மு. அப்பாவு, மாவடட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழ்நாடு நிதித்துறையின் அரசு முதன்மை செயலாளர் த. உதய சந்திரன் ஆகியோருடன், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில், 13 ஏக்கர் பரப்பளவில் 54,000 சதர அடியில், மொத்தம் 60 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, “பொருநை அருங்காட்சியகம்” (Porunai Museum) ஙட்டடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப் பேற்றவுடனேயே, இந்த ஆட்சியின் பெயரை, ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று அறிவித்தார்.

இதன் பொருள், ‘எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்! எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள், தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்’ என்பதே ஆகும். இந்த குறிக்கோளை, இலக்காக கொண்டு தான், இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.
வீர நன்னிலை நிறைந்த, திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் தமிழர்களின் பண்பாடு, ஆரம்பகாலம் மற்றும் வளர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில், “பொருநை” என்ற பெயரில் “அருங்காட்சியகம்” அமைக்க, ஒரு அற்புதமான இடத்தை முதலமைச்சர் தேர்வு செய்தார்.
இந்த அருங்காட்சியகத்திற்கு, 2022 – ஆம் ஆண்டு, மே மாதம் 18- ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சர் 56 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். வருவாய்த் துறை மூலமாக 13.2 ஏக்கர் நிலம், இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொதுப்பணித் துறையின் மூலம், மொத்தம் ஏழு கட்டடத் தொகுதிகளாக (நிர்வாகக் கட்டடம், சிவகளை கட்டடம், கொற்கை கட்டடம் ஏ மற்றும் பி, ஆதிச்சநல்லூர் கட்டடம் ஏ மற்றும் பி, சுகாதார வசதிக் கட்டடம்) பிரிக்கப்பட்டு,கட்டடப் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
ரெட்டியார்பட்டி மலையையொட்டி இருக்கிற இந்த இடம், இயற்கையாகவே அழகானது. இங்கு, தோட்டக்கலை நிபுணர்களை கொண்டு “புல்வெளி” (Lawn) அமைக்கப்படுகிறது.
அருங்காட்சியகத்தின் உள்ளே, தொல்பொருட்களை காட்சிப்படுத்துதல் (Display) மற்றும் அவற்றை பற்றிய படங்கள் காட்டுதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதைவிட, இது வித்தியாசமாக இருக்க வேண்டும்! என்பதற்காக, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கொற்கையில் முத்துக்குளித்தலையும், அதன் அபாயங்களையும், முத்துக்கள் எப்படி ரோமாபுரி போன்ற நாடுகளுக்கு சென்றன? என்பதையும், பார்வையாளர்கள் ஒரு திரைப்படத்தை பார்ப்பதுபோல காண்பதற்காக, “மினி தியேட்டர்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 97 சதவிகித பணிகள் முடிவடைந்து உள்ள நிலையில்,மீதம் உள்ள அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு நிதித்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் த. உதய சந்திரன், இந்த திட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். எனவே, பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
வரும் 21-ஆம் தேதி (டிசம்பர்) பொருநை அருங்காட்சியகத்தை, முதலமைச்சர் நேரில் திறந்து வைப்பார்!”- இவ்வாறு, அமைச்சர் எ.வ. வேலு, நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.*
