உடுமலை, நவம்பர் 13.
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் விதிகளை மீறி ராஜவாய்க்காலின் குறுக்கே குழாய் பதித்து,வணிகப் பயன்பாட்டுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில்,குத்தகை அடிப்படையில் பல விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் தனி நபர் ஒருவர் குழாய்களை பதித்து வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதாக மதிவாணன் என்பவர் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் அமராவதி ஆற்றிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படும் கடத்தூர் ராஜவாய்க்காலின் உள்ளே சட்டவிரோதமாக குழாய் பதித்துள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்த ஆய்வில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட நபர்,தனது சொந்த கிணற்றிலிருந்து விவசாயப் பயன்பாட்டுக்காக தண்ணீர் கொண்டு செல்வதால்,குழாய்களை அகற்ற முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராஜவாய்க்கால் பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மடத்துக்குளம் தாசில்தார் குணசேகரன்,பொதுப்பணித்துறை மடத்துக்குளம் உதவிப்பொறியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு மற்றும் விசாரணை அடிப்படையில் குழாய் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்த நிலையில்,தற்போது வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அதனை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே வரும் 21 ம் தேதி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதும்,முழுமையாக ஆய்வு செய்து,குழாய் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தால் குழாய்கள் உடைத்து அகற்றப்படும்.
மேலும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
