பழனி, அக். 11:
தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.20.15 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட பழனி ரயில் நிலையத்தின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக பழனி மற்றும் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களைத் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமருடன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். பிரதமரின் திறப்பு விழா நிகழ்வை முன்னிட்டு பழனி ரயில் நிலையத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேரலை செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன், மண்டல ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, தென்னக ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ் மற்றும் மதுரை மண்டல உதவி முதன்மை பொறியாளர் கார்த்திக் உள்ளிட்ட ரயில்வே உயரதிகாரிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்தின் மூலம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.

இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
