கோவை:
தமிழகத்தில் தவெக ஆட்சியில் சீர்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மகளிரணி சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் அன்னம்மாள், கனிமொழி, ரங்கநாயகி, ஜெயலலிதா, கவிதா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர்கள் துரை. செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நண்பா-நண்பிகளுக்கு விலைவாசி உயர்வே விஜய்யின் தீபாவளி பரிசு:
சிறப்புரையாற்றிய திமுக மாணவரணி மாநிலச் செயலாளர் வீரமணி பேசுகையில்,
“தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது. தேர்தலுக்கு முன்பு ‘நாடா இது காடா’ என்று கேட்ட விஜய், தற்போது தமிழகத்தைச் சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறார். பெண் குழந்தைகளைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பவே பெற்றோர் பயந்து நடுங்கும் சூழல் நிலவுகிறது.
கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தவெக நிர்வாகிகள் பலரும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பி ஓடும் அளவிற்குப் பாதுகாப்பற்ற ஆட்சி நடக்கிறது. இந்த தீபாவளிக்குத் தனது நண்பா, நண்பிகளுக்குக் கடுமையான விலைவாசி உயர்வையே விஜய் பரிசாக வழங்கியுள்ளார்” எனக் கடுமையாகச் சாடினார். தலைமைக்கழகப் பேச்சாளர் கலாவதியும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.
இப்போராட்டத்தில் தவெக அரசுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கோவை மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி, மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பல ஆயிரக்கணக்கானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
– கோவை மாவட்டச் செய்தியாளர்: சம்பத் குமார்
