கல்குளம்: கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகா, நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மணக்கரை புதுக்கிராமம் பகுதியில் அமைந்துள்ள ஊத்துக்குளியின் உடைக்கப்பட்ட கரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குளத்தின் கரை சில ஆண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்ட நிலையில், நீண்ட காலமாகச் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், குளத்தின் நிலை குறித்து அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். குளத்தைச் சீரமைக்கக் கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கட்சியினர், அண்மையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, உடைக்கப்பட்ட குளக்கரையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில், தற்போது உடைக்கப்பட்டிருந்த ஊத்துக்குளியின் கரை சீரமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்தப் பணி நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மாவட்ட ஆட்சியருக்கும் நுள்ளிவிளை ஊராட்சி செயல் அலுவலருக்கும் குளச்சல் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
