குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 1.15 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன. தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார் பங்கேற்று மாணவர்களுக்கு கேக் வழங்கி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருமான பிரபுசங்கர், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ.ஆ.ப., முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், மாணவ, மாணவியர்கள் தங்களின் சிந்தனையைச் சிதறவிடாமல் பள்ளிப் படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தி நன்றாகப் படிக்க வேண்டும். கல்வி ஒன்றே வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கான முக்கிய வழி. மாணவர்கள் தங்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும் என்றார்.
மேலும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கேக் வழங்கவும், மாணவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 795 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1,15,475 மாணவ, மாணவியர்கள், 7,041 ஆசிரியர்கள் மற்றும் 695 ஆசிரியரல்லாத பணியாளர்கள் என மொத்தம் 1,23,211 பேருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 14-ம் தேதி விடுமுறை என்பதால், ஒரு நாள் முன்னதாகவே பள்ளிகளில் இந்நிகழ்ச்சி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பரைக்கோடு அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற அமைச்சர் ராஜேஷ் குமார், அங்குள்ள குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசாமி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் காயத்திரி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் சௌந்தராஜன், ஜெயபால் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக தக்கலை சிறப்பு நிருபர் அன்ஷாத் மாலிக்
