Headlines

வனஉயிரினங்களைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை: ஆட்சியர்

வனஉயிரினங்களைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை: ஆட்சியர் வனஉயிரினங்களைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை: ஆட்சியர்

நாகர்கோவில், அக்டோபர் 8:
காடுகள், மலைகள் மற்றும் வனஉயிரினங்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் நடைபெற்ற வனஉயிரின வார விழா நிகழ்ச்சியில், மாணவர்கள் மற்றும் வனஉயிரின பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி ஆட்சியர் பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் மலைகள், அடர்ந்த காடுகள், வயல்வெளிகள் மற்றும் கடல் வளங்களைக் கொண்ட இயற்கை வளம் மிக்க மாவட்டம் என அவர் குறிப்பிட்டார். அரிய மூலிகைகள், வனவிலங்குகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக இம்மாவட்டம் உள்ளது.

காடழிப்பு, புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் மற்றும் காட்டுத்தீ உள்ளிட்ட காரணிகளால் வனஉயிரினங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. இயற்கைச் சூழலில் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், ஒரு உயிரினத்தின் அழிவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்கக்கூடும் என ஆட்சியர் தெரிவித்தார்.

மனிதர்களின் வாழ்விட விரிவாக்கம் காரணமாக மனித–விலங்கு மோதல்கள் ஏற்படுவதாகவும், வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழக விடியல் செய்திகளுக்காக குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *