பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் பழனி மலைக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பழனி சக்கிலியர் மக்களுக்குச் சொந்தமான மடத்தைத் தனிநபருக்குப் பத்திரப்பதிவு செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் ஐந்தாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாகை திருவள்ளுவன், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது தவறான முன்னுதாரணம் என்று விமர்சித்தார். தமிழ்நாடு முதல்வர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடனேயே பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர் அதனைத் தாமதப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், கரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தில் மட்டுமே அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய முதல்வர் விஜய் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் கடுமையாகச் சாடினார்.

முன்னதாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் பேரறிவாளன், முத்துக்குமார், முகிலரசன், திருவணன், அழகர், தர்மராஜ், அருண்குமார், நாகராஜ், முகமது ரியாஜ், இந்திய குடியரசு கட்சியின் ஆறுமுகம், சிவமணி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 89733 50663.
