திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், பாரம்பரியமாக சண்முக நதியில் புனித நீராடுவதையும், முன்னோர்களுக்கு ஈமக் காரியங்கள் மற்றும் தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தர்ப்பணம் செய்வோர் தங்களது துணிகளை ஆற்றிலேயே விட்டுச் செல்வது, சாக்கடை நீர் கலப்பது மற்றும் துர்நாற்றம் வீசுவது போன்றவற்றால் நதி கடுமையாக மாசடைந்து, பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் நதி முழுவதும் ஆகாயத் தாமரைகள் (அமலச்செடி) மண்டிக் கிடந்ததால் பக்தர்கள் சண்முக நதிக்கு வருவதையே தவிர்க்கத் தொடங்கினர்.
இந்நிலையில், சண்முக நதியை அழகுபடுத்தி, நீர்நிலையைச் சுத்தம் செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில், மாவட்டப் பொறுப்பாளர்கள் கனகராஜ் மற்றும் மாடசாமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் தூய்மைப் பணியைத் தொடங்கினர். இராட்சத இயந்திரங்களைக் கொண்டு நதியில் உள்ள ஆகாயத் தாமரைகள், குப்பைகள் மற்றும் பழைய துணிகளை அகற்றும் பணி கடந்த இரண்டு வாரங்களாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இச்சமூகப் பணியின் மூலம் இதுவரை சுமார் 40 டன் குப்பைகள் ஆற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையில் சமூக ஆர்வலர் துர்க்கை ஈஸ்வரன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், மனிதநேயச் சிந்தனையாளர்கள் மற்றும் பக்தர்கள் நல அமைப்புப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு ஆற்றைச் சுத்தம் செய்து வருகின்றனர்.
சண்முக நதி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்ட பிறகு, வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ஈமக் காரியங்கள் செய்யும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பழைய துணிகளைப் போடுவதற்குத் தனித் தொட்டிகள் அமைக்கவும், பக்தர்கள் புனித நீராடுவதற்கும் கோயில்களுக்குத் தீர்த்தம் எடுத்துச் செல்வதற்கும் தனித்தனி இடங்களைப் பிரித்துத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். தன்னார்வலர்களின் இந்தத் தூய்மைப் பணி நிறைவடைந்ததும், நதியைப் பராமரிக்கும் பொறுப்பை அறநிலையத்துறை ஏற்று முறையான வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
