தமிழறிஞரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பாவலரின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அஞ்சலி; பல்வேறு தரப்பினரும் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குத்தம்பி பாவலரின் நினைவு மண்டபத்தில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், இ.ஆ.ப., பாவலரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆஸ்டின், மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா, மாமன்ற உறுப்பினர்கள் நவீன், ரிஸ்வானா, பியாசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாவலரின் குடும்பத்தினர் சார்பில் அவரது பேரன்கள் கவிஞர் ஜமால் முகமது, ஷேக் தம்பி மற்றும் கொள்ளுப் பேரன்கள் பாவலர் ரியாஸ், சபீக் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை தெரிவித்தனர்.
மேலும் தமிழக வெற்றிக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட, மாநகர மற்றும் மண்டல நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் தொண்டர்கள் நினைவு மண்டபத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
