மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகளில் 6,000 போலீஸார் ஈடுபடுத்தப்படுவர் என எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார். குடமுழுக்கையொட்டி அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, விழாவிற்காக அரசின் அனைத்துத் துறைகள் சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதலாக 1,000 நகரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதுடன், 8,000 வாகனங்களை நிறுத்தும் வகையில் 56 இடங்களில் வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு மற்றும் அவசரப் பணிகளுக்காக 400 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலைக் கண்காணிக்க கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 207 சிசிடிவி கேமராக்களும், 70 முக அங்கீகாரக் கேமராக்களும் பொருத்தப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான கட்டுப்பாட்டு அறையின் மூலம் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
