திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே, ஒருதலைக் காதலால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை ஹாலோபிளாக் கல்லால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மடத்துக்குளம் அடுத்துள்ள துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த வனசின்னத்துரை என்பவரின் மகள் சௌமியாவை, அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் ரஞ்சித் (19) என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதற்கு சௌமியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், அடிக்கடி மதுபோதையில் பெண் வீட்டார் வசிக்கும் தெருவிற்குச் சென்று சத்தம் போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 17.08.2026 அன்று இரவு சுமார் 22.30 மணியளவில், ரஞ்சித் மீண்டும் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டின் முன்பு நின்று மதுபோதையில் தகராறு செய்துள்ளார். அதைத் தட்டிக்கேட்ட துங்காவி உடையார்பாளையத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கணேசன் என்பவருடன் ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற ரஞ்சித், அருகில் கிடந்த ஹாலோபிளாக் கல்லை எடுத்து கணேசனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த கணேசனை உடனடியாக மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக, அவரது சொந்த விருப்பத்தின் பேரில் உடுமலையில் உள்ள ‘பிரணவ் ஆர்த்தோ கேர்’ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் காயமடைந்தவரின் உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் உடுமலை டி.எஸ்.பி அலுவலகத்தை நேரில் சென்று முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, கணியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரஞ்சித்தைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு ரஞ்சித்தைக் கைது செய்த காவல்துறையினர், அவரை மடத்துக்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
