Headlines

பெரியகுளம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள்: புதிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

பெரியகுளம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள்: புதிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியக் கோரிக்கைகள் வருமாறு:
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குத் தாமதமின்றி துரிதமான சிகிச்சையும் சேவைகளும் கிடைப்பதை உறுதிசெய்ய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அல்லது, தேனி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அங்குப் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லத் தகுந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை (Bar) உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

பெரியகுளத்தை சுற்றியுள்ள சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி மற்றும் மஞ்சளாறு அணை ஆகிய பகுதிகளைச் சீரமைத்து, சிறுவர் பூங்காக்கள் அமைத்து மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் வெளியூர்ச் சுற்றுலாவாசிகளை ஈர்த்து, பெரியகுளம் பகுதியின் தொழில் மற்றும் வணிகத் துறையை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, மாணவர்களுக்கான கழிப்பறை வசதி, சமையலறை மற்றும் வகுப்பறைகளைச் சீரமைக்க வேண்டும். மேலும், மாணவர்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக முதலுதவிப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர்நிலைகள் தூர்வாரும் பணி: பெரியகுளம் பகுதியில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் அணைகளை முறையாகத் தூர்வாரி, வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் குறித்துப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் உடனடியாக நேரில் சென்று கள ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *