நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், ஆசாரிப்பள்ளம் மேற்கு மண்டல அலுவலகத்தில் ‘செழிப்பு இயற்கை உரம்’ விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் திருமதி. ஐஸ்வர்யா IAS அவர்களின் உத்தரவின்படியும், மாநகர நல அலுவலர் திருமதி. சரோஜா அவர்களின் அறிவுரையின்படியும் இந்த விற்பனை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் நுண் உர செயலாக்க மையத்தில் தயாரிக்கப்படும் ‘செழிப்பு இயற்கை உரம்’ பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தென்னை ஓலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தென்னை விளக்குமாறுகளும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘செழிப்பு இயற்கை உரம்’ 5 கிலோ பை ரூ.30 என்ற விலையிலும், ஒரு தென்னை விளக்குமாறு ரூ.30 என்ற விலையிலும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சேகரிக்கப்படும் இயற்கைக் கழிவுகளை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
இந்நிகழ்வில் சுகாதார அலுவலர் திரு. பகவதி பெருமாள், சுகாதார ஆய்வாளர்கள் திருமதி. ப்ளாரன்ஸ் மேரி மற்றும் செல்வி. வித்யா, மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இயற்கை உரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த விற்பனை மையம் செயல்படுவதுடன், மாநகராட்சியின் கழிவு மேலாண்மை முயற்சிகளுக்கும் இது துணைபுரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
